search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனமழை இடி தாக்கி வாலிபர் பலி"

    கோவை நகரில் நேற்று பலத்த கனமழை பெய்தது. அப்போது இடி தாக்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் கோவை நகரில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கியது. லங்காகார்னர், அவினாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

    பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், பேரூர், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், ஆழியார் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக நொய்யல் ஆறு, பவானி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. முத்தண்ணன் குளத்துக்கு அதிக தண்ணீர் வந்ததால் பூசாரிபாளையம் அருகே சாய கழிவு நீர் கலந்து நுரை பொங்க காட்சியளித்தது.

    வடவள்ளி பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இடிதாக்கி தொழிலாளி ஒருவர் பலியானார். அவரது பெயர் இளைய ராஜா (வயது 25). கோவை சோமையம்பாளையத்தை சேர்ந்த இவர் அப்பகுதியில் நடைபெற்று வரும் தனியார் நிறுவன கட்டுமான பணியில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை முதல் மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது இடி தாக்கியதில் இளையராஜா உடல் கருகினார். சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆலாந்துறையை அடுத்த இருட்டுப்பள்ளம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மழை அடிவாரத்தில் பட்சிணாம் பதி கிராமம் உள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் குடியிருந்து வருகின்றனர். நேற்று இப்பகுதியில் பெய்த கனமழையால் மேற்கு தொடர்ச்சி மழையில் உருவான காட்டாற்று வெள்ளம் பட்சிணாம்பதி கிராமம் வழியாக வெளியேறியது.

    இதனால் அங்கிருந்த குடிசை வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மக்களை மீட்டு முகாமில் தங்க வைத்தனர். அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

    பொள்ளாச்சியை அடுத்த ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்டது கருங்குன்று கிராமம். இந்த கிராமத்திற்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள சாலையில் சிறிய பாலம் உள்ளது. இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் ஓடைகள், சிற்றோடைகள் போன்றவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய பாலத்தின் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உடைந்தது . இதனால் கருங்குன்று கிராம மக்கள் தவிப்புக்குள்ளாகினர். கனமழை காரணமாக காரமடை அருகே உள்ள பெல்லாதி குளத்தின் கரையில் மண்அரிப்பு பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கரை உடைப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதால் குளத்தின் கரை பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான ஆனைமலை, கோட்டூர், நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பலத்த மழை பெய்தது.

    மழை காரணமாக ஆழியாறு அருகே உள்ள குரங்கு நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.

    ×